டிசம்பர் 12 - இது 28 வருட பழக்கமல்ல , பண்டிகை ! || நான் கொண்டாடும் தலைவர் பிறந்த நாள்
வருடா வருடம் அப்பா என் பிறந்த நாளை விமரிசையாவே கொண்டாடுவார். புத்தாடை, கேக், இனிப்பு, பிடித்த சமையல், பிறந்த நாள் திரை பாடல்கள்ன்னு எல்லாமே இருக்கும். அப்பா காவல்துறை அதிகாரி, அதனால நிறைய காவலர்கள் விழாக்கு வருவாங்க. ஆனா கோடைக்கால விடுமுறை என்பதால் நண்பர்கள் ஊர்ல இருக்க மாட்டாங்க, இருக்கும் சிலருக்கும் பரிசு வாங்க முடியாது, ஏன்னா அன்னைக்கு வணிகர் தினம் என்பதால் எல்லா கடைகளும் விடுமுறைல இருக்கும். ஒருத்தர் பிறந்த நாளை கூட மறக்காம வாழ்த்து சொல்லும் எனக்கு நண்பர்களோட பள்ளியில பிறந்த நாளை கொண்டாட முடியலங்கற ஏக்கம் வெகு நாட்களாவே இருந்தது.
Source: Truefixstudios
அந்த குறையை நிவர்த்தி செய்ற மாதிரி ஒரு நாள் ஒருத்தர் வீட்டு வாசல்ல நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்த என் கிட்ட ஒரு நோட்டீஸ் குடுத்துட்டு போனார். அதுல ஒரு உருவ நிழல் படம் இருந்தது. கால்கள அகட்டி வச்சு கைகள பாக்கெட்ல வச்சுட்டு நின்னுட்டிருந்த அந்த உருவத்தோட தலை முடிய பார்த்தாலே சின்ன குழந்தையும் சொல்லும் அது சூப்பர் ஸ்டார்ன்னு. எங்க பகுதியோட ரஜினி ரசிகர் மன்ற சார்பில் தலைவர் பிறந்த நாளின் விழா அழைப்பிதழ் தான் அது. அப்பா கிட்ட இத பத்தி கேட்டேன். நம்ம பிறந்த நாளை மட்டுமில்லை நமக்கு பிடிச்சவங்க பிறந்த நாளை கூட நாம கொண்டாடலாம்ன்னு அவர் சொன்னதும் என் கண்கள் விரிஞ்சது. மனசுக்குள்ள ஒரு உவகையும் பூத்தது.
Source: Scoopwhoop
டிசம்பர் 11 மாலை. அப்பா கிட்ட நான் சொன்னது “ என் பிறந்த நாளை என்னால என் நண்பர்களோட கொண்டாட முடியல, ஏன் எனக்கு ரொம்ப பிடிச்ச ரஜினி அண்ணாவோட பிறந்த நாளை நான் கொண்டாடக்கூடாது ?” . அப்பாவோட பதில் வெறும் ஒரு புன்னகை மட்டுமே. டிசம்பர் 12. நான் பள்ளிக்கு கிளம்பும்போது அப்பா என்கிட்ட ஒரு பாக்கெட் குடுக்க உள்ள இருந்தது காஃபி பைட் சாக்லேட். சந்தோஷத்தின் உச்சிக்கே போய்ட்டேன் . அன்னைக்கு தொடங்கியது அந்த அற்புதமான பழக்கம்.
கல்லூரி தொடங்கி மூனே மாதத்துல தங்களோட பிறந்த நாளையே கொண்டாட தயங்கற சமயத்துல டிசம்பர் 12க்கு சக மாணவர்களுக்கு இனிப்புகள் தர, எல்லாருக்கும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும்போது , “இன்னைக்கு என் பிறந்த நாள் இல்ல , ரஜினி பிறந்த நாள் “ என்று சொன்ன அந்த தருனத்துல எல்லாரோட புருவமும் ஆச்சர்யத்துல உயர என் தலை கர்வத்துல உயர்ந்துச்சு. காலை வணக்கும் சொல்லும்போது கூடவே நான் அடிக்கும் படையப்பா சல்யுட் எனக்கு “படையப்பா” அப்படிங்கற அடைமொழியும் வாங்கி தந்துது. என் பெயர் சொன்னா கூட தெரியாதவங்களுக்கு படையப்பான்னு சொன்னா உடனே தெரிஞ்சிடும்.
வருடா வருடம் எனக்குன்னு ஒரு பாணியில டிசம்பர் 12 கொண்டாட ஆரம்பிச்சேன். தலைவரோட நெருப்பு நிறமான கருப்புல புத்தாடை, காலையில கோவிலுக்கு போய் தலைவருக்காக வேண்டுதல், எனக்கு பிடித்த அசைவம் மற்றும் இனிப்பு , ஒரு திரைப்படம் இப்படி தான் அந்த நாள் குதூகலமா நகரும். தலைவர் ரசிகர்கள் நட்பு வட்டத்துல இணைந்ததுக்கு பிறகு தலைவர் திரைப்பட மறு வெளியீடு, இரத்த தானம் இப்படி இந்த கொண்டாட்டம் நீண்டது. மரம் நடுதல், ஆதரவற்றோருக்கு உணவளித்தல் மாதிரி சமூக நல உதவிகள் என பங்கெடுக்க வாய்ப்புகளும் நிறையவே இருக்கு.
ச்சே... தலைவருக்கு மட்டுமே அமைந்த பாக்கியம் இது 💞
ReplyDeleteVery true...he is special forever 💖💖💖
ReplyDelete