அப்பாவுடன் கூட்டு சதியும் பாபா முதல் நாள் முதல் காட்சியும்
பாபா திரைப்படம் வெளியான 2002 ஆம் ஆண்டு கல்லூரியின் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்தேன். எங்களது கல்லூரியில் அத்தியாவசிய பொருட்களுக்காக ஒரு கேன்டீன் தொடங்கி இருந்தார்கள். அதன் பொறுப்பாளாராக எனது தோழி இருந்தார். இடைவேளைகளில் மேற்பார்வைக்காக அவர் செல்லும்போது உடன் நானும் செல்வேன். பொருட்களை எடுத்துக் கொடுப்பதற்காக ஒரு சிறுவனை நியமித்து இருந்தார்கள். பாபா படத்தின் பாடல் கேஸட் வெளியாகி இருந்த சமயம். எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருக்க அந்த சிறுவனோ “ அக்கா.. நான் ரசிகர் மன்றத்துல இருக்கேன். நான் வேணா வாங்கி தரவா” என்று கேட்க வியப்பில் ஆழ்ந்தேன். விலை ஐம்பது ரூபாய் என சொல்ல சந்தேகம் தட்டினாலும் முயற்சித்து பார்க்கலாம் என தோன்ற பணத்தை கொடுத்தேன்.
மறு நாளே கேஸட்டுடன் கூடவே பாபா முத்திரை கொண்ட ஒரு செயினும் தந்து “மன்றத்துல குடுத்தாங்கக்கா “ என்று சொல்ல சந்தோஷக் கடலில் மூழ்கினேன். “டேய் .. கலக்குற டா “ என்று சொல்ல , “இது என்னக்கா ... முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் வேணுமா “ என்று கேட்க இதயம் பட படத்தது. “டேய்..கெடைக்குமா “ என்று கேட்க “கண்டிப்பா வாங்கி தரேன் கா .. நீங்க செம ரஜினி ஃபேன்.. உங்களுக்கு கண்டிப்பா தரேன்” என்று சொல்ல மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றேன். என் கூட எனது தோழிகள் இருவரும் வர சம்மதிக்க, திரைப்படமும் சுதந்திர தினம் அன்று வெளியாக உள்ளது எனவே கல்லூரியில் இருந்து சென்று வருவது சுலபம் என பெருமூச்சு விடும் வேளையில் பிரின்சிபாலிடமிருந்து ஒரு திடுக்கிடும் சர்க்குலர் வந்தது.
அதில் சுதந்திர தினத்தன்று எவரும் விடுமுறை எடுக்க கூடாது என்றும் மிகவும் அவசியம் ஏற்பட்டால் வீட்டில் பெற்றோரிடமிருந்து கடிதம் வந்தால் மட்டுமே விடுப்பு அளிக்க படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. தலைவர் படம் வெளியீடு என்பதாலேயே இந்த அறிவிப்பு என்று அனைவரும் உணர்ந்துகொண்டோம். எனது தோழிகள் இருவரும் ப்ராஜெக்ட் என சொல்லி ஒரு வாரம் முன்னரே வீட்டிற்கு சென்று விட்டார்கள். நான் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க எனது ஆபத்பாந்தவரான எனது அப்பாவிடம் விஷயத்தை விளக்கினேன். எனது மிக பெரிய பின்பலமே எனது அப்பா தான். சிறு வயதில் “ரஜினி படமே எப்ப பார்த்தாலும் பாக்கறியே.. ரஜினி உனக்கு என்ன வேணும் “ என்று நண்பர்கள் கேலி செய்ய, “ரஜினி என் அண்ணன்னு சொல்லுடா” என்று தட்டிக் கொடுத்தவர் என் அப்பா. அன்று முதல் அவர் தலைவரை குறிப்பிடும் போது “டேய் .. அண்ணன் படம் டீ.வீ ல வருது பாரு “ என்றே குறிப்பிடுவார்.
இந்த முறையும் அப்பா தோள் குடுத்தார். “நீ ஏன்டா கவலை படற. வீட்ல பூஜை இருக்கு. குடும்பம் மொத்தமும் கண்டிப்பா கலந்துக்கனும்ன்னு உங்க ஹாஸ்டல்க்கு நான் லெட்டர் போடறேன் “ என்று சொன்னார் தீவிர பெரியார்வாதியான என் அப்பா. சொன்னது போல் கடிதமும் வர அவுட் பாஸ் பெற வார்டன் முன் நின்றிருந்தேன். கடிதம் வந்த அனைவருக்கும் அவுட் பாஸ் கிடைக்க எனது முறை வந்ததும் ஏற இறங்க பார்த்தார் வார்டன். நான் ரஜினி ஃபேன் என்பது சகலரும் அறிந்ததே. அவருக்கு சந்தேகம் பொறி தட்ட “நீ மட்டும் பிரின்சிபால் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வா “ என்று கிண்டலாக சொல்ல மனதே உடைந்து விட்டது எனக்கு. “பிரின்சிபால் ஆபீஸ் போகாம அவர் வீட்டுக்கு காலைல போனா பேப்பர் படிச்சிட்டு காபி குடிச்சிட்டு கூலா இருப்பாரு. பெர்மிஷன் வாங்கிட்டு வந்துடு “ என தோழிகள் யோசனை கூற அதிகாலையே அவர் வீட்டு வாசலில் சென்று அமர்ந்து விட்டேன்.
எதிர்பார்த்தது போலவே நடை பயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பி காபி குடித்துக்கொண்டிருந்தார் அவர். என்னை கண்டதும் உள்ளே அழைத்து விஷயத்தை கேட்டு “ ஒரு நாள்ல திரும்பி வந்துடுவியாமா” என்று கேட்க, “கண்டிப்பா வந்துடுவேன் சார் “ என்று சொல்ல அனுமதி கிடைத்து விட வானில் பறக்க ஆரம்பித்தேன். வார்டனிடம் சொன்னதும் அவர் திரு திருவென விழித்துக் கொண்டே அவுட் பாஸ் தர, காலரை தூக்கி விட்டுக் கொண்டு திரைப்படத்தை காண தயாரானேன். பெருந்துறையிலிருந்து ஈரோடு செல்லும் வழியெங்கும் போலீஸ் இருப்பதை கண்டு சுதந்திர தினத்துக்காக போலும் என்று எண்ணுகையில் ஒரு பெரியவர் ஒரு காவலரிடம் “என்ன சார் , இவ்ளோ போலீஸ் “ என்று கேட்க, “இன்னைக்கு ரஜினி படம் ரிலீஸ் தாத்தா, அதான் இவ்ளோ போலீஸ் “ என்று சொல்ல முகமெல்லாம் பெருமிதம் எனக்கு.
திரையரங்கில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எங்களிடம் உள்ளது வெறும் டோக்கன் தான் அதை கவுண்டரில் குடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் என்பது தான் அது. கவுண்டர் கண்ணுக்கே தென்படாத வகையில் ரசிகர்கள் கடலென சூழ்ந்திருக்க அங்கிருந்த மூன்றே பெண்கள் நாங்கள் மட்டும் தான். உள்ளே நுழைந்து டிக்கெட் வாங்குவதென்பது ஹிமாலய சாதனை. மறுபடியும் ஆபத்பாந்தவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள, “ஈரோடு இன்ஸ்பெக்டர் என் ஜூனியர் தான்,நான் சொன்னேன்னு சொல்லு டா “ என்று அப்பா கூற அங்கிருந்த ஒரு காவலரிடம் விஷயத்தை கூறினேன். அவரும் இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தை சொல்லிவிட்டு எங்களிடம் வந்து “என் கூட வாங்கம்மா “ என கூறி மேனேஜர் அறைக்கு அழைத்து சென்றார்.
மேனேஜரிடம் “இவங்க டி.எஸ்.பி. பொண்ணு” என்று அவர் சொல்ல, மேனேஜர் எங்களை தனி வழியில் திரையரங்கம் உள்ளே அழைத்து சென்றார். மருத்துவ படிப்பை மேற்கொண்ட எனது அப்பா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கலவரத்திலிருந்து தப்பித்து வந்து, மருத்துவம் மேற்கொள்ள முடியாமல் பொருளாதாரம் படித்து காவல்துறையில் சேர்ந்ததை எண்ணி அன்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். முதல் மூன்று நாற்காலிகளை நாங்கள் ஆக்கிரமித்துக் கொள்ள, அந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. திரைப்படம் தொடங்க சில நிமிடங்கள் முன்பே அரங்கத்தை திறந்தார்கள். அலையென உள்ளே வந்த ரசிகர்கள் எங்களை கண்டதும் சில வினாடிகள் அப்படியே நிற்க பெருமை தாங்கவில்லை எங்களுக்கு. பாபா திரைப்படம் தலைவர் ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷ விருந்து. மனதில் ஒரு வித திருப்தி உணர்வோடு வெளியே வந்த போது, இரண்டாவது காட்சி டிக்கெட் மட்டுமே கிடைக்கப் பெற்ற எனது கல்லூரி தோழர்கள் என்னை கண்டு ஆச்சர்யம் கொண்டார்கள்.
கல்லூரியில் என்னை ‘படையப்பா’ என்றே அழைப்பது வழக்கம். “ஹேய் படையப்பா. ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட்டே வாங்கிட்டியா. செம்ம. படம் எப்படி?” என கேட்க “சூப்பர்” என கர்வத்தோடு சொல்லி வெளியே வர, கல்லூரி பேருந்து பழுது சரி செய்து கல்லூரி திரும்பி கொண்டிருந்தது. ஓட்டுநர் என்னை அடையாளம் கண்டு கொண்டு “என்னமா .. காலேஜ்க்கா ?” என்று கேட்க “ஆமாண்ணா”, என்ற என்னை பேருந்திலேயே கொண்டு வந்து விடுதியில் சேர்த்து விட்டார்கள். அடுத்த நாள் கல்லூரி செல்லும்போது பாபா முத்திரை கொண்ட சங்கிலி பெரிதாக இருந்ததால் கழுத்தில் அணிவது நன்றாக இருக்காது என்று கையில் காப்பு போல அணிந்து செல்ல, ஆசிரியர்கள் அறையிலிருந்து அதை பார்ப்பதற்காக அழைப்பு வரவே மீண்டும் பெருமிதம். ஆசிரியர்களுக்கு அதை காட்டி விட்டு வகுப்புக்கு திரும்புகையில் ஒரு ஆசிரியை ஓடி வந்து “ஹேய்..நேத்து படத்துக்கு போனியே, படம் எப்படி ?” என்று பின்னால் ஹெச்.ஓ.டி வருவது தெரியாமல் கேட்க, நான் மாட்டிக்கொண்டேன் என நினைத்து திரு திருவென விழிக்க , சிரித்துக்கொண்டே நகர்ந்து சென்றார் ஹெச்.ஓ.டி.
Disclaimer: The pictures are used only for reference. I do not own the copyrights.
Also, read
பாபா தலைவா் ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷம் 😍❣️
ReplyDeleteVery true 👍
ReplyDeleteசெம்ம.... மெய்சிலிர்த்து போனேன் 😍🤘
ReplyDeleteThank U 🙏🙏🙏
Delete