தலைவரும் ஆட்டோவும் || Chennai diaries



சின்ன வயசுல இருந்தே எனக்கு தலைவரை ரொம்ப பிடிக்கும். அதேப்போல தான் ஆட்டோவும். எனக்காக எங்க அப்பா ஒரு ஆட்டோவ வரவைச்சு காசு குடுத்து எங்க தெருவுல ரவுண்டு அடிக்க வைப்பாருன்னு அம்மா சொல்வாங்க. வளர்ந்த பிறகும் ஆட்டோ மீதான பற்று அப்படியே தான் இருந்துது. வெளியூர் பயணம் கூட ஆட்டோல போனா என்னன்னு கூட பல முறை யோசிச்சிருக்கேன். சென்னைக்கு வந்ததும் டூ வீலர் கேட்டேன். ஆனா ரெண்டு விஷயத்துக்காக எங்க வீட்ல வாங்கி தரல. ஒன்னு சென்னையின் ஹெவி டிராபிக். இன்னொன்னு சுள்ளுன்னு எனக்கு வர கோபம். ரெண்டுமே ஆபத்தா தெரியவே டூ வீலர் கனவு டிராப் ஆய்டுச்சு.




சென்னையில என்னோட முதல் பஸ் பயணம் படு மோசம். பஸ் ரோமியோக்கள் பற்றி கேள்வி ஞானம் மட்டுமே அப்போ இருந்துது. அனுபவ பாடம் இல்ல. அதுனால தான் ஒரு ரோமியோ என்னை இடிக்க முயற்சி செய்றத உணரவே ரொம்ப நேரம் ஆச்சு. அவ்ளோ தான். அத்தோட பஸ் பயணத்துக்கு முழுக்கு போட்டுட்டேன். அன்று முதல் ஆட்டோ பயணம் தான். சென்னை வந்து பல வருஷம் ஆச்சு. என் சொத்துல பாதிய ஆட்டோவுக்கு தான் செலவு செஞ்சிருபேன். அவ்ளோ பயணங்கள். அதுல சுவாரசியமான பயணங்கள் இருந்துது. நெகிழ்வான பயணங்கள் இருந்துது. சண்டை சச்சரவு நிறைந்த பயணங்களும் இருந்துது.


ஆட்டோ எனக்கு ரொம்ப பிடிக்க இன்னொரு காரணமும் இருந்துது. எல்லாருக்குமே தெரிந்த விஷயம் தான். பாட்ஷா படம். பொதுவா நான் ஆட்டோ பயணங்களின்போது ஒட்டுநர் கிட்ட பேசிட்டே போறது வழக்கம். அடி மட்டத்துல நடக்கற பிரச்சனை முதல்கொண்டு உலக நாடுகள் பிரச்சனை வரை விவாதிப்பாங்க. சில சமயம் ரொம்ப ஆச்சர்யமா கூட இருக்கும். அப்படி பேச்சு குடுத்ததுல தான் தெரிஞ்சுது நிறைய பேரு தலைவரோட ரசிகர்கள் மற்றும் பாட்ஷா பார்த்து ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சுருக்காங்கன்னு. அதுலயும் தலைவர் பட ஸ்டிக்கர் இருந்தா உடனே ஏறிடுவேன். அப்படி அண்ணா நகர் ஆட்டோ ஸ்டான்ட்ல நான் சந்திச்ச இரண்டு நண்பர்கள் மற்றும் தீவிர தலைவர் ரசிகர்கள் பற்றி பகிர்ந்துக்க விரும்பறேன்.


முதல் நபர் பெயர் ரஜினி வெங்கட். செம்ம ஸ்டைலான தலைவர் ஸ்டிக்கர ஆட்டோ முன்பாகத்துல ஒட்டி இருப்பாரு. தலைவரோட தீவிர ரசிகர்ன்னு பெயர் பார்த்ததுமே தெரிஞ்சிருக்கும். பயணத்தின் போது அவர் ஒரு சம்பவத்த பகிர்ந்துகிட்டாரு. அவரோட சிறு வயதில ஒரு நாள் தலைவர பார்த்தே தீரணும்னு தன்னோட வீட்ல இருந்து கால் நடையாவே போயஸ் கார்டன் வரை நடந்து போயிருக்கார். தலைவர் வீட்டை அடைஞ்சதும் செக்யூரிட்டி உள்ள அனுமதிக்கல. ஆனா நாள் முழுவதும் தலைவர் வீட்டுக்கு எதிரிலேயே உட்காந்திருந்திருக்கார். இதை மாடில இருந்து தலைவர் கவனிக்கவே செக்யூரிட்டிக்கு போன் பண்ணி என்னன்னு விசாரிச்சுருக்கார். விவரம் தெரிஞ்சதும் அவர உள்ள விட சொல்லிருக்கார். அது மட்டுமில்லாம லதா அவர்களிடம் இவருக்கு மோர் தரும்படி சொல்ல அவங்களும் தந்திருக்காங்க. அப்புறம் இனிமே இப்படி வரக்கூடாதுன்னு அட்வைஸ் பண்ணி திருப்பி அனுப்பி வச்சிருக்கார்.


இந்த சம்பவத்த ரொம்ப சிலாகிச்சு என்கிட்டே பகிர்ந்துகிட்டார் வெங்கட். தலைவரோட தாக்கத்துல தான் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சதாகவும் தலைவரோட ஷூட்டிங் பத்தின செய்தி வந்தா இப்பவும் போய் பார்ப்பதாகவும் சொன்னார். இவருக்கு ஒரு நெருங்கிய நண்பர் இருக்கார். அவர் பெயர் கமலக்கண்ணன். அவரும் ஓட்டுநர் தான்.அவரும் தலைவரின் தீவிர ரசிகர் என்றும் வெங்கட்டும் தானும் சிறந்த நண்பர்களா இருப்பதுக்கு தலைவர் மேல உள்ள அன்பும் ஒரு காரணம்ன்னு சொன்னார். அப்போ அவர் கையில் அவரோட நண்பர் பெயர பச்சை குத்தி இருக்கறத நான் கவனிச்சேன். அவங்க நட்ப பார்த்து வியப்பா இருந்துது. சிரிச்சுகிட்டே அவர் கிட்ட ஒரு விஷயம் கேட்டேன். “உங்க நண்பரோட பேர பச்சை குத்திருக்கீங்க சரி. தலைவர் பேர பச்சை குத்தலையா?” என்று கேட்டதும் அவர் அளித்த பதில் என்னை புல்லரிக்கவைத்தது. “தலைவர் பேர நெஞ்சுல பச்சை குத்தி இருக்கேன்மா” என்று அவர் சொன்னதும் நெகிழ்ந்து விட்டது எனக்கு.


தலைவர் மேல உள்ள இந்த அன்ப பல பேரால புரிஞ்சிக்க முடியாது. இத வெறித்தனமா தான் பார்க்கப்படுது. ஆனா அவர முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு ஆட்டோ ஓட்டும் தொழில எடுத்து எத்தன பேர் தங்கள் வாழ்வாதாரத்த அமைச்சிருக்காங்கன்னு அவங்களுக்கு தெரிவதில்லை. ஆட்டோ பயணமே ரொம்ப உல்லாசாமனது. அதுலயும் தலைவரோட ரசிகர்கள் வந்துட்டா பயணக் களைப்பே தெரியாது. ரொம்பவே பரிச்சயமான உணர்வு மேலோங்கிடும். பாதுகாப்பாகவும் உணர முடியும். இன்னைக்கும் ஆயுத பூஜை நாளன்று நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாடல் ஒலிக்காத ஆட்டோ ஸ்டான்ட்களை பார்க்கவே முடியாது.

Disclaimer: Few pictures are used only for reference. I do not own the copyrights.

Comments

Popular posts from this blog

Gujarat wonders with the team Aatrupadai

Stylish pillars of Pallavas

Why Shikandi - the game changer of Mahabharat is not so popular || Mahabharat life lessons