கற்பனை தாஜ் மஹால்.
படித்ததில் பிடித்தது. இது ஒரு கற்பனை கதையே. இருப்பினும் நம் நெஞ்சை சற்று உலுக்கும் கதை. இதை ஏதோ ஒரு சிறிய புத்தகத்தில் படித்த நினைவு. அன்றைய தினம் தன் காதல் மனைவி மும்தாஜை பறிகொடுத்துவிட்டு ஷாஜஹான் உயிர் இருந்தும் நடைப்பிணமாக அலைமோதிக்கொண்டிருந்தார். மும்தாஜுக்காக ஒரு நினைவு மாளிகை கட்ட முடிவெடுத்து அதற்கான சிறந்த மாதிரியை தயார் செய்துக்கொடுக்கும்படி ஆஸ்தான கட்டிடக் கலைஞர் மற்றும் இன்னும் பல விற்பன்னர்களுக்கு செய்தி அனுப்பியிருந்தார். அனால் அவர்கள் சமர்ப்பித்த ஒரு மாதிரி கூட அவர் மனதிற்கு நிறைவாக இல்லை.
அன்றைய தினம் ஆஸ்தான கட்டிட கலைஞர் ஒரு மாதிரி எடுத்து வருவதாக கூறியிருந்தார். அவருக்காகதான் அன்னம் தண்ணி உண்ணாமல் காத்துக்கிடந்தார் ஷாஜஹான். கலைஞரும் வந்தார்.
“வணக்கம் சுல்தான்.” “வாருங்கள் விற்பன்னரே! ஏன் இவ்வளவு தாமதம்? எவ்வளவு நேரம் நான் காத்துக்கொண்டிருப்பது?” “சுல்தான் அவர்களே, நான் வருவதாக சொன்ன நேரத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்திருக்கிறேன்.” “ஓ! பதட்டத்தில் நான் கவனிக்கவில்லை. மாதிரி தயாரா? விரைந்துக்காட்டுங்கள்!” “மூன்று மாதிரிகள் தயார் செய்திருக்கிறேன் சுல்தான். உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்தால் கட்டிட பணியை தொடங்கி விடுவோம்.”
அவ்வாறாக கூறி மூன்று மாதிரிகளையும் காண்பித்தார் விற்பன்னர். அதுவரை இருந்த பதட்டம் ஆவலாக மாறி சுல்தானின் கண்கள் அகல திறந்தன. திறந்த மாத்திரத்தில் ஆவல் அக்னி பிழம்பாக முகமெல்லாம் மாறத்தொடங்கியது. கண்களில் கோபத்தின் ஜுவாலைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. விற்பன்னருக்கு எதுவும் விளங்கவில்லை. நடுங்கிய தேகத்தோடு சுல்தானை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். “என் மனதுக்கு பிடித்த மாதிரி இன்றாவது கிடைக்கும் என்று நம்பினேன். நீங்கள் என்னை ஏமாற்றமடைய செய்துவிட்டீர்கள்” என்றார் ஷாஜஹான். அதற்கடுத்து அவர் சொன்னதுதான் விற்பன்னரின் சப்த நாடியையும் ஒடுக்கியது.
“உங்களுக்கு நாளை காலை வரை நேரம் அளிக்கிறேன். என் மனதிற்கு பிடித்தமான ஒரே ஒரு மாதிரியோடு வர வேண்டும். தவறினால் தமது தலை கொய்யப்படும்.” என்று அனல் தெறிக்க கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் ஷாஜஹான். கவலையும் பயமும் தோய்ந்த முகத்தோடு வீடு சென்றார் விற்பன்னர். அதைக்கண்டு நெஞ்சம் பதைக்க அவரது மனைவி அவரை விசாரிக்க நடந்தவற்றை கூறினார் விற்பன்னர். மேலும் எவ்வளவு இயன்றும் தன்னால் சுல்தானுக்கு பிடித்தமான ஒரு மாதிரியை உருவாக்க முடியவில்லை என்று வேதனைப்பட்டார். அன்றிரவே கடைசி இரவு எனக்கூறி கண்ணீர் வடித்தார்.
சற்று நேரம் மௌனமாக கண்களை மூடி யோசித்த அவர் மனைவி அவரிடம் கூறினார் “வேதனையை கைவிடுங்கள். நாளை உதயம் நல்லதொரு உதயமாக அமையும். என் வார்த்தையை நம்புங்கள்.” ஒரு இரவில் ஒன்றும் ஆகிவிடாது என்று தெரிந்தாலும் மனைவியின் நம்பிக்கை வார்த்தைகள் சிறிது ஆறுதல் அளிக்க கண் அயர்ந்தார் விற்பன்னர். மறுநாள் சூரியன் மெல்ல தனது கரங்களை விரிக்க திடுக்கிட்டு எழுந்தார் விற்பன்னர். இனி வருத்தப்படுவதில் பயனில்லை என்று உணர்ந்து விடைப்பெற்று செல்ல தனது மனைவியை தேடினார். ஆனால் அவர் அங்கில்லை. மாறாக அவர் விட்டு சென்ற கடிதம் மட்டுமே இருந்தது.
“பிரியமானவரே, சுல்தான் அவர்கள் கேளிக்கைக்காக மாளிகை கட்ட எண்ணவில்லை. தன் காதல் மனைவிக்கு தன் துயர் முழுவதும் கலந்து காதல் சொட்டும் ஒரு நினைவு மணிமாளிகையை கட்ட எண்ணுகிறார். இல்லறத்தில் இன்பமாக இருக்கும் நமக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் அவரது துயரம் புரியாது. ஆகையால் நான் ஒரு முடிவெடுத்துள்ளேன். என்னை பிரிந்தால் மட்டுமே உங்களால் அவர் விரும்புவதை போல் ஒரு மாதிரி செய்ய இயலும். இந்தக்கடிதம் உங்கள் கையில் இருக்கும் தருவாயில் நான் சரயு நதியின் கரங்களில் இருப்பேன். கவலைக்கொள்ள வேண்டாம். என் தியாகத்தை மனதில் நிறுத்தி ஒரு மாதிரி செய்து சுல்தானுக்கு காண்பியுங்கள். நல்லதே நடக்கும்.”
அடுத்த நொடி கதறி துடித்து சரயு நதியை நோக்கி ஓடினார் விற்பன்னர். அங்கே அவரது மனைவியின் காலணிகளை கண்டு வாய்விட்டு அலறினார். பின் மனைவி சொன்னதை மனதில் நிறுத்தி தன் மனைவிக்கு ஒரு மணி மண்டபத்தை மனதில் காட்டினார். மனதில் விரிந்த மாளிகையை ஒரு மாதிரியாக செய்து சுல்தானிடம் எடுத்து சென்றார். முகத்தில் கடு கடுப்புடன் “வாருங்கள் விற்பன்னரே , இன்றாவது என் எண்ணம் ஈடேறுமா இல்லை தாங்கள் தங்கள் இன்னுயிரை பிரிய போகிறீர்களா?” என்று கேட்டார் ஷாஜஹான்.
“சுல்தான், உயிர் பிரிவதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை. எனது கவலை எல்லாம் உங்கள் மனம் சாந்தியடைய வேண்டும் என்பதே.” என்று கூறிவிட்டு திரைசீலையை விலக்கினார். அதை பார்த்த மறு நொடி சுல்தானின் கோபம் தெறித்த கண்கள் கண்ணீர் குளமாய் மாறிப்போனது. விற்பன்னரை ஆரத்தழுவி “என் உள்ளக்கிடங்கை உயிர்ப்பித்துவிட்டீர்கள், இதுவே நான் எதிர்பார்த்தது.” என்று கண்ணீர் மல்க கூறினார் ஷாஜஹான். உடனேயே அதை கட்டும் பணிகளை துவக்கினார். அதுவே இன்றளவும் புகழ்ப்பெற்று விளங்கும் தாஜ் மஹால்.
பல வருடங்களுக்கு முன் நான் படித்து ரசித்ததை என் கற்பனை வரிகள் கொண்டு இங்கே பகிர்ந்துள்ளேன். பின்னாளில் வோல்கா முதல் கங்கை வரை என்ற புத்தகத்தை படிக்கும்பொழுது அதில் வரும் பதினொன்றாம் அத்தியாயத்தில் மகா கவி அஸ்வகோசர் அவர்கள் தனது காதலி பிரபாவிடம் மயங்கி நாடக கலையில் தனது ஆர்வத்தை குறைத்துக்கொள்ள, தன்னால் கவனம் சிதறியவரை மீட்டெடுக்க இதேப்போன்று ஆற்றில் குதித்து தன் இன்னுயிரை போக்கி மாபெரும் தியாகம் செய்ததாக குறிப்பிடபட்டிருந்தது. இரு கதைகளும் கற்பனை கதைகளே. ஆனால் இரண்டிற்கும் ஒரே கரு காதல்தான். இக்காதலர் தினத்தில் இதை நான் இங்கே பகிர்கிறேன்.
#valentinesday2024
Comments
Post a Comment