மனிதம் போற்று | A glimpse
Image source: Pinterest
“சிவகாமி அக்கா.. கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா குடுங்க” என்ற குரல் கேட்டு சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தார் சிவகாமி. “வா கமலா” என்று சொல்லியவாறெ வெளியே வந்தவரின் கையில் முட்டையை பார்த்ததும் திடுக்கிட்ட கமலா “நீங்க சனிக்கிழமை முட்டை சாப்பிட மாட்டீங்களே?” என்றார். கமலாவை பார்த்து புன்னைகைத்து விட்டு “இன்னைக்கு சரவணனோட சிநேகிதன் வீட்டுக்கு வரான், சரவணன் அவன கூப்பிட போயிருக்கான், அவனுக்காக முட்டை பொரியல் செய்யலாம்ன்னு யோசிச்சேன்” என்றார் சிவகாமி.
“அப்படியா..ஆச்சரியமா இருக்கே … சரவணன எனக்கு ரொம்ப நாளா தெரியும். சினேகிதன்னு அவன் யாரையும் கூட்டிட்டு வந்ததே இல்லையே?”
“எனக்கும் அது தான் ஆச்சரியம். ஏதோ ப்ரொஜக்ட் விஷயமா ஒரு மாசமா பக்கத்துல இருக்கற நூலகத்துக்கு போய்ட்டு வரான். அங்க தான் சந்திச்சானாம். இவனுக்கு பாட சம்மந்தமா நிறைய உதவி பண்ணிருக்கான். அதான் சரவணனுக்கு புடிச்சுப்போச்சு.”
“சரிக்கா..கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா குடுங்கக்கா” என்றார் கமலா. “இதோ தரேன்” என்று திரும்பிய சிவகாமியை “அம்மா, இவன் தான் என் ஃப்ரென்ட் ராஜா”” என்ற சரவணின் குரல் நிறுத்தவே புன்னகயுடன் திரும்பிய சிவகாமியின் முகம் ராஜாவை கண்டதும் சட்டென்று வெளிரிப்போனது.
ஒல்லியான உடல்வாகு, படிய வாரிய தலை, சிவப்பில் குர்தாவும் வெள்ளையில் பைஜாமாவும் அணிந்திருந்த ராஜாவிடம் பார்த்ததும் பளிச்சென்று தெரிந்தது அந்த வித்தியாசம். சிவகாமிக்கு ஒரு நொடி சர்வ நாடியும் ஒடுங்க பூமி பந்தைப்போல் தலை சுற்றத்துவங்கியது.
“வணக்கம் அம்மா “ என்று கைக்கூப்பி வணங்கிய ராஜாவை கண்டு ஒரு நிமிடம் சிலையாகிப் போன சிவகாமிக்கு சட்டென்று கமலாவின் நினைவு வர, தூக்கிவாரிப்போட்டார் போல் திரும்பிப்பார்த்தார். அங்கே கேலிப் புன்னகையுடன் நின்றிருந்த கமலா “சினேகிதன் வரான்னு சொன்னீங்க.. இப்படின்னு சொல்லலையேக்கா , சரி, நான் அப்புறமா வரேன், எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு” என்று நமுட்டு சிரிப்புடன் வெளியேற , தான் கண்டதை அக்கம் பக்கத்தாரிடம் பகிரத் தான் அத்தனை வேகமாக செல்கிறார் என்றுணர்ந்த சிவகாமிக்கு அவமானம் பிடுங்கி திண்றது.
ஒரு கட்டத்தில் அவமானம் கோபமாக மாற சரவணனின் கையை பற்றி சரேலென்று அறைக்குள் இழுத்து சென்றார். “அம்மா…அம்மா…என்னம்மா பண்றீங்க..” என்ற சரவணின் கேள்விக்கு “நீ என்னடா பண்ணிட்டு இருக்க..அத எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்த?” என்று பதில் கேள்வி கேட்டார் சிவகாமி.
“அம்மா…என்னம்மா அதுன்னு சொல்றீங்க. அவன் என் ஃப்ரென்ட்மா” என்ற சரவணனை எரித்துவிடுவதுப் போல் பார்த்தார் சிவகாமி. “டேய்…நீ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்திருந்தா கூட இவ்வளவு அதிர்ச்சியாகிருக்க மாட்டேன். இத கூட்டிட்டு வந்திருக்க. உனக்கு சினேகிதம் பண்ண வேற ஆளே கிடைக்கலையா?” என்று பொரிந்து தள்ளினார் சிவகாமி.
சட்டென்று கதவை தட்டும் ஒலி கேட்டு இருவரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர். அங்கே ராஜா நின்று கொண்டிருந்தான். கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டார் சிவகாமி. ஒரு நீண்ட பெருமூச்சுடன் ராஜா பேச தொடங்கினான்.
“அம்மா…உங்க ரெண்டு பேருக்கு நடுவுல வந்து பேசறதுக்கு முதல்ல உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்க்கறேன். என்னை மாதிரி ஒரு ஆள நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. உங்க அதிர்ச்சி எனக்கு புரியுது. ஆனா உங்க கிட்ட சொல்ல எனக்கு சில விஷயங்கள் இருக்கு. அத மட்டும் சொல்லிக்கிறேன். கொஞ்சம் பொறுமையா கேளுங்க. அதுக்கப்புறம் நான் கிளம்பிடறேன்”
கோபம் மெல்ல விலக மெதுவாக திரும்பி ராஜாவை பார்த்தார் சிவகாமி. களங்கமில்லாத புன்னகையுடன் நின்றிருந்த ராஜாவை பார்த்ததும் அவர் மனம் சற்று இளகியது. இருக்கையில் அமர்ந்து எதிர் இருக்கையை கைக்காட்ட தான் பேசப்போவதை கேட்க சிவகாமி தயாராகி விட்டதை உணர்ந்த ராஜா நிம்மதி பெருமூச்சோடு இருக்கையில் அமர்ந்து பேசத்தொடங்கினான்.
“அம்மா. என் பேரு ராஜா. அப்பா அம்மா வச்ச பேரு ராஜேஸ்வரி. நான் ஒரு திருநம்பி. இது என்னோட பதிமூணாவது வயசுல தான் எங்க வீட்டுக்கு தெரிஞ்சுது. அப்பா அம்மாக்கு என்ன பண்றதுனே தெரியல. இந்த விஷயம் எப்படியோ ஊருக்குள்ள பரவ ஆரம்பிச்சுடுச்சு. அப்பாவுக்கு அவமானம் தாங்கல. எனக்கு விஷம் குடுத்து கொல்ல நினைச்சாரு. அம்மாவுக்கும் அதிர்ச்சி தான். ஆனாலும் அம்மாவாச்சே. ராத்திரியோட ராத்திரியா என்னை வீட்ட விட்டு எங்கயாவது போய் பொழச்சுக்கோ, ஆனா திரும்பி மட்டும் வந்துடாதேன்னு அனுப்பிட்டாங்க.
உலகத்துலேயே ரொம்ப பாவப்பட்டவங்க யாருமே இல்லாத ஆதரவற்றவங்கன்னு சொல்வாங்க. ஆனா அவங்கள விட ரொம்ப பாவம் நாங்க தான்மா. ஏன்னா அவங்களுக்கு கூட ஆதரவற்றோர் இல்லம் இருக்கு, ஆனா எங்களுக்கு அங்க கூட இடம் தர ரொம்ப யோசிக்கறாங்க. பொண்ணா பொறந்தா மட்டுமில்ல பொண்ணா பொறந்து ஆணா மாறுன எங்களுக்கும் பாதுக்காப்புங்கறதே இல்லம்மா. சரியான பாதுக்காப்பும் வயிறார உணவும் கிடைக்கவே எனக்கு பத்து மாசம் ஆச்சு.
சரவணன் படிக்க வர்ற நூலகத்த நடத்தற ஆதரவற்றோர் காப்பகம் தான் எனக்கு அடைக்கலம் குடுத்துச்சு. மனசளவுல ரொம்பவே சோர்ந்து போயிருந்த என்னால வெளியே உள்ளவங்க கிட்ட சகஜமா பேசி பழக முடியல. எங்க மேலாளர் கிட்ட சொல்லி தபால் வழியா தான் கல்லூரி படிப்ப முடிச்சேன். என்னோட தாழ்வுமனப்பான்மைனால அதிகம் பேச தேவை இல்லாத இந்த நூலக மேற்பார்வையாளர் வேலைக்கு கெஞ்சி கேட்டு வந்து சேர்ந்தேன்.
அங்க தான் சரவணன சந்திச்சேன். மத்தவங்க என்னை பார்க்கறதே ரொம்ப கூச்சமா இருக்கும். ஆனா சரவணன் என்கிட்ட ரொம்ப சகஜமா பழகினான். என்னோட கதைய நான் பகிர்ந்தேன். அப்போ உங்கள உதாரணம் காட்டி தான் என்னோட தாழ்வு மனப்பான்மைய போக்கினான். என்னை பார்க்கும்போதல்லாம் உங்க நியாபகம் வரும்ன்னு சொல்வான், அதுனால தான் உங்கள பார்க்க வந்தேன்” என்ற ராஜாவை அதுவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சிவகாமி அந்த கடைசி வாக்கியத்தின் அர்த்தம் புரியாமல் திரும்பி சரவணனை பார்த்தார்.
அதுவரை பொறுமை காத்த சரவணன் தனது அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து அவரது கரங்களை பற்றி அவரது கண்களுக்குள் ஊடுருவி சொல்லத்தொடங்கினான் “ஆமாம்மா,இவன பார்க்கும்போது எனக்கு உங்க நியாபகம் தான் வந்துது. சின்ன வயசுலயே அப்பா தவறிட்டாரு, அதுக்கப்புறம் தனியா நின்னு போராடி என்னை இந்த அளவுக்கு கொண்டு வர்றதுக்கு நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்னு எனக்கு தெரியும். உங்கள ஒரு பெண்ணா நான் பாக்க்லை. சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் உள்ள ஒரு தனி மனுஷியா தான் பாக்கறேன். சாதிக்க பாலின அடையாளம் தேவையே இல்லைன்னு உங்கள பார்த்து தான் கத்துக்கிட்டேன். அதை தான் இவனுக்கும் சொன்னேன்”. இதை கேட்ட சிவகாமியின் கண்கள் பெருமிதத்தால் பனித்தன.
ராஜா தொடர்ந்தான் “சரவணன நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படறேன்மா. என்னால பெத்தவங்கள பெருமைப்பட வைக்க முடியல. ஆனா சரவணன் உங்கள தலை நிமிர வச்சிருக்கான். தன்னோட நிலைப்பாட்ட பக்குவமா உங்களுக்கு புரிய வச்சுட்டான். இதே மாதிரி என்னோட நிலைமைய என்னோட பெத்தவங்களுக்கு புரிய வைக்க நான் முயற்சி கூட பண்ணலன்னு நினைச்சு நான் வெக்கப்படறேன். சரவணன் குடுத்த உற்சாகத்துல தான் நாளைக்கு ஊருக்கு போய் அப்பா அம்மாவ சந்திச்சு நான் படிச்சு நல்ல நிலைமையில இருக்கேன்னு சொல்லப்போறேன். என்னை ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் அவங்க விருப்பம். நான் சோர்ந்து போக மாட்டேன்”
சிவகாமியின் கண்களிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. ராஜாவை இறுக அணைத்துக்கொண்டார். “என்னை மன்னிச்சுடுப்பா. இந்த சின்ன வ்யசுல உங்க ரெண்டு பேருக்கும் இருக்கற புரிதலும் பக்குவமும் எனக்கில்லாம போய்டுச்சு. காரணம் நம்ம சமூகம். திருநங்கைகள பத்தி திரைப்படங்கள்ள பத்திரிக்கைல வர்ற அளவு விழிப்புணர்வு கூட திருநம்பிகள் பத்தி இருக்கறது இல்ல. அதான் ஒரு நிமிஷம் அறிவை இழந்துட்டேன். ஆனா என் அறியாமைய நீங்க எனக்கு புரிய வச்சுட்டீங்க. நாளைக்கு உன் சார்பா பேச உன் கூட நானும் சரவணனும் உங்க வீட்டுக்கு வர்றோம். சரியா?” என்று புன்னகைத்தவாறே கேட்ட சிவகாமியின் கரம் பற்றி ஒற்றிக்கொண்டான் ராஜா. அம்மாவையும் நண்பனையும் இறுக அணைத்துக்கொண்டான் சரவணன்.
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல சிந்தனை, மனிதம் என்பது அனைவருக்கும் பொருந்தும்.. அருமை
ReplyDeleteTrue...tats the intention
DeletePerfect glimpse for the book... Waiting for it to get published❤️
ReplyDeleteTats a grt motivation..wil work with more enthusiasm..thank you
DeleteAfter a long time I'm back to LinkedIn and this is the first post that I read. Prabha , I appreciate your effort , keep rocking and thank you for introducing the term Thiru nambi
ReplyDelete